Monday, July 11, 2011

கூக்குரல்

அம்மா வரும்வரை-
மரத்தை வெட்டாதீர்!
கூக்குரல் இட்டது!
குஞ்சுக் குருவி.

வியப்பு

புரியாவிட்டாலும்
வியந்து போனதாய்
காட்டிக்
கொள்கிறேன்
குழந்தைகள் காதில்
சொன்ன ரகசியத்தை!

தேன்கூடு.....

நீ "சக்கரைகட்டி" என
நினைத்து
கரைக்க முயன்று...,
நேற்றெல்லாம்
பெய்த மழை
கடைசியில்
ஒப்புக்கொண்டது...
நீ சக்கரைகட்டி அல்ல...
"தேன்கூடு"...என்று..?!

முகம்!

அன்பை பற்றிப்
படிக்கும்
போதெல்லாம்
தவறாமல் வந்து 
போகிறது,
அம்மாவின் முகம்!

முகம்!

அன்பை பற்றிப்
படிக்கும்
போதெல்லாம்
தவறாமல் வந்து 
போகிறது,
அம்மாவின் முகம்!

நேரம் நல்ல நேரம்!

எந்த ஒரு நல்ல காரியத்தையும்
செய்வதற்கு
ராகு காலம் பார்க்க
வேண்டியதில்லையே....
நாளும் கிழமையும் பார்த்துக்
கொண்டு
நோயும் தீர்வும்
வருவதில்லையே...
மற்றோருக்கு மகிழ்ச்சி
தர வழிகளைத் தேடு...
சந்தோசம் உன்
முகவரிகளை
விசாரிக்கும்....

காலத்தின் கோலம்!

மழை இல்லாத
மாநகரத்தில்
விவசாயம் இல்லை.
ஆனால்
விளைச்சலோ அமோகம்...
அடுக்குமாடி வீடுகள்!

சிறை..!


திறந்துதான் விடுங்களேன்
சுதந்திரமாய் வாழட்டும்
தவறு செய்யாமலேயே
சிறை வாசத்தில்
ஆயுட் கைதியாய்
அடைபட்டுக் கிடக்கிறது
பறவைகள்!!

திருமணம்!

திருமண
விருந்துதான்...
ஆனாலும்
கை நனைக்க
மனமில்லை...
காதலி
திருமணம்!

காதல் கவிதை

எங்கோ பிறந்த உரமும், நிலமும்,
கலக்கின்றன வேளாண்மையில்...
 
எங்கோ பிறந்த நதிகள்,
கலக்கின்றன கடலில்...........
 
எங்கோ பிறந்த தங்கமும், பித்தளையும்,
கலக்கின்றன நகைகளில்...
 
எங்கோ பிறந்த பட்டும், நூலும்,
கலக்கின்றன புடவைகளில்...
 
எங்கோ பிறந்த கவிஞனும், தமிழும்,
கலக்கின்றன கவிதைகளில்...
 
எங்கோ பிறந்த நானும், நீயும்,
கலக்கின்றோம் நம் திருமணத்தில்... 

Friday, July 1, 2011

சர்க்கரை நோய் எப்படி வருகிறது?


மனிதன், காலையில் எழுந்து, காலைக் கடன்களை முடித்து, குளித்து, உடையணிந்து உணவருந்தி, சம்பாதிக்கச் செல்கிறான். வேலை, வீடு, மனைவி, மக்கள், எதிர்காலம், தொழில் என்று தொல்லையில்லா வாழ்க்கையை நடத்தவே விரும்புகிறான். அவன் வாழ்க்கையை புரட்டிப் போட்டு, சந்தோஷத்தை கெடுக்க வந்த நோய் தான் சர்க்கரை நோய்.
சர்க்கரை நோயைக் கண்டுபிடித்தவுடன் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்:
* சர்க்கரை நோய் நிலை, சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டதா? அல்லது நீண்ட நாட்கள் கண்டுப்பிடிக்கப்படாமல் இருந்திருந்ததா?
* சர்க்கரை நோய் உடலில் இருப்பது சில, பல வருடங்களா?
* சில ஆண்டுகளாக இருக்கிறது என்றால் அதன் விளைவுகளை அறிய வேண்டும்.
* பல ஆண்டுகளாக இருந்தால் இதனால் பலவிதமான கோளாறுகளை கண்டறிதல் வேண்டும்.
முதல் மூன்று வகைகளில் அவ்வளவு பாதிப்பு தெரியாது. கடைசி நான்காவது வகையில் பல உறுப்புகளின் தாக்கம், செயலிழப்புகளைப் பார்க்க முடியும்.
சர்க்கரை நோய் எப்படி வருகிறது?
நாம் உண்ணும் உணவு, உணவுக் குழாய் மூலம் இரைப்பையை அடைந்தவுடன் செரித்து இரைப்பையிலிருந்து சிறுகுடலுக்கு செல்கிறது. அந்நேரத்தில் இரைப்பை, சிறு குடலிலிருந்து இன்கிரிடின் என்ற குளுகோசை கட்டுப்படுத்தும் சுரப்பிகள் பீட்டர் செல்களை தூண்டி இன்சுலின் சுரக்கப்பட்டு குளோஸ் என்ற சர்க்கரையை உடலுக்கு ஏற்ற சக்தியாக மாற்றி உடலுக்கு புத்துணர்வு கொடுக்கிறது.
சர்க்கரை நோய்:
நாம் சாப்பிடும் அதிக சர்க்கரையினால் மட்டுமல்லாது ஆல்பாசெல், பீட்டாசெல் இந்த செல்களில் சுரக்கும் குளுகோகான் ஆல் பருத்து வருகிறது. இன்சுலின் என்ற ஹார்மோன் பீட்டாவிலிருந்து வருகிறது.
(ஏ) ஆல்பா செல் குளுகோனை சுரக்கிறது. இது சர்க்கரை ரத்தத்தில் அதிகமாகிறது.
(பி) பீட்டா செல் (இன்சுலினை சுரக்கிறது). இது சர்க்கரையை சக்தியாக மாற்றுகிறது.
'ஏ'யும் 'பி'யும் தராசுத் தட்டுகள் போல சரியாக இயங்க வேண்டும். இதில் கோளாறு (ஏ) அதிகமாகி (பி) குறைந்தால் சர்க்கரை நோய் உண்டாகும்.
சர்க்கரை நாம் உண்ணும் உணவிலிருந்து மட்டுமல்லாது இந்த குளுகான் கல்லீரலில் இருந்து சர்க்கரையை அதிகமாக்குகிறது. மற்றும் கொழுப்பு, புரதம் முதலியவற்றில் இருந்தும் சர்க்கரையை உருவாக்கி ரத்தத்தில் குளுகோஸை அதிகமாக்கி விடுகிறது.
சர்க்கரை நோய் கண்டவர்கள் தினமும் நரகமாக, சந்தோஷத்தை தொலைத்து நோயை வேண்டா வெறுப்புடன் சரியாக கவனிக்கத் தவறினால் ஏற்படும் விளைவுகள் பல. முக்கியமாக நாம் பயப்பட வேண்டிய உறுப்புகளில் உயிர் காக்கும் உறுப்புகளான இதயம், மூளை, சிறுநீரகம், கண் இவைகளை கண்ணும் கருத்துமாக கண்காணிக்க வேண்டும்.
கேசம் முதல் நகம் வரை:
சர்க்கரை நோய் உச்சந்தலை கேசம் முதல் காலில் உள்ள நகம் வரை தாக்குகிறது. சர்க்கரை நோயை கண்ணுக்குத் தெரியாத மைக்ராக்ஸ் கோப் ரத்த நாளங்களின் வியாதி எனப்படும். இதை ஆஞ்சியோபதி என்பர்.
மைக்ரோ ஆஞ்சியோபதி டயாபடிக் ரெட்டினோபதி கண்களுக்கு தெரியாத ரத்தக் குழாய்களின் உட்சுவர் கொலஸ்டிரால் தாக்கப்பட்டு நடுச்சுவரில் உள்ள தசைகள் செயலிழந்து விடுகிறது. இதனால் கண்ணின் உட்திரையில் கோளாறு ஏற்பட்டு, கண்ணில் உள்ள ரத்த நாளங்கள் பழுதடைந்து ரத்தக் கசிவு ஏற்பட்டு கண் பார்வையை பாதித்து நாளடைவில் பார்வை இழக்க நேரிடும்.
டயாபடிக் நெப்ரோபதி என்ற சிறுநீரகக் கோளாறு:
சிறுநீரகம், உடலிலுள்ள கழிவுகள் இது நாம் உண்ணும் உணவில் உள்ள செரிமானத்திற்கு பிறகு ரத்தத்திலுள்ள வேண்டாத வேதியியல் பொருட்களை உடல் உறுப்புக்களால் ஏற்கப்பட்டு மீதி தேவை இல்லாத கழிவுப் பொருட்களான யூரியா போன்றவற்றை வடிகட்டி வெளியேற்றுவது நெப்ரான் என்ற சிறுநீரகத்தின் உயிர்நாடி. இது கெட்டு விடாமல் பாதுகாக்க வேண்டும். இது கெட்டுவிட்டால் யூரியா, கிரியாட்டின் மேலும் பொட்டாசியம் அதிகமாகி சிறுநீரகம் செயலிழக்கிறது. மூன்று மாதம் ஒரு முறை பொதுவாக மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சர்க்கரையின் அளவு துல்லியமாக சீராக பராமரிக்கப்படுகிறதா என்பதை அறிய கிளைக்கேர் சுலேட்டு நிமோக்குளான் அளவு பார்த்து சர்க்கரை கட்டுப்பாட்டில் இருப்பதை தெரிந்துகொள்ள வேண்டும். இந்த நெப்ரான் என்ற சிறுநீரக உறுப்பு மிகவும் முக்கியமானது. சர்க்கரை நோயினால் இது பாதிக்காதவாறு கண்காணிக்க வேண்டும்.
இதற்கு முக்கிய பரிசோதனைகளான எச்.பி.ஏ.சி., என்ற கிளைகோ சிலேட் ஹிமோகுளோபின் ரத்ததத்தின் சிவப்பு அணுக்களில் உள்ள குளுகோஸ் அளவை துல்லியமாக மூன்று மாதமாக எப்படி சர்க்கரை வியாதி இருந்திருந்தது என்பதைக் காட்டும். இது முக்கிய பரிசோதனை இரண்டாவது பரிசோதனை மைக்ரோ ஆல்பர்னியூரியா. இது சிறுநீரகத்தின் உயிர்நாடியான நெப்ரானின் செயல்பாட்டைக் குறிக்கும்.
ஸ்டிரோக்கை உண்டாக்கும்:
மூளையைத் தாக்கி, உடலில் உள்ள கை, கால்களை செயல் இழக்கச் செய்து தற்காலிக ஸ்டிரோக் அல்லது நிரந்தர ஸ்டிரோக்கை உண்டாக்கி உடலின் பகுதியை செயலிழக்கச் செய்து வாழ்க்கையையே முடக்கி விடுகிறது. சர்க்கரை இதய நோய் பாதிப்பு உயிரைப் பறிக்கும். மற்ற உறுப்பு பாதிப்புகளினால் உயிர் உடனே போகாது. வாழ்க்கை பாதிக்கும் சர்க்கரை நோய் எத்தனை காலம், ஓராண்டாகி, ஐந்து, பத்து, இருபது ஆண்டா என்பதைப் பொறுத்து இதய தாக்கத்தை சொல்லலாம். முப்பது ஆண்டுகளில் பல நூறு கட்டுரை, பல புத்தகங்கள் சர்க்கரை நோயினால் வரும் இதய நோய்கள் பல உள்ளன. இதற்கு இந்த கட்டுரை போதாது. முக்கியமா இதய நோயைப் பற்றி தெரிந்துகொள்ளலாம்.
மைக்ரோ ஆஞ்சியோபதி, பெரிய ரத்தக் குழாய்களை தாக்கி, கரோனரி ரத்தக் குழாய் அடைப்பை உண்டாக்குகிறது. கண்ணுக்குப் புலப்படாத ரத்த நாளங்கள் பாதிப்பால் இதய தசைகளை பாதிக்கப்பட்டு இதய வீக்கம் ஏற்பட்டு மையோபதி என்ற வியாதி டயபடிக் கார்டியோ மையோபதி என்ற இதய வீக்க நோய் ஏற்படுகிறது. இதை சர்க்கரை நோய் கண்டுபிடித்த நேரத்தில் இருந்து இதயத்தை பாதுகாக்க வேண்டும்.
இதய நோயாளி சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும். இதய நோயாளிகள் ஆஞ்சியோ பிளாஸ்டி ஸ்டென்ட் வைத்த வர்களும் சரி, பைபாஸ் செய்தவர்களும் சரி, ஸ்டென்ட், பைபாஸ் கிராப்ட் இவைகளை பாதுகாத்து வர வேண்டும்.
ஏன்?
சர்க்கரை வியாதி கண்டவர்களுக்கு கரோனரி ஸ்டென்ட்டும், பைபாஸ் கிராப்ட்டும் எளிதில் அடைக்க வாய்ப்புகள் அதிகம். இதற்கு தாறுமாறாக ஏறும் இறங்கும். சர்க்கரை அளவும் கெட்டக் கொழுப்புகளான டி.எச்.எப்.,எல்.டி.எல்.,தான் காரணம்.
புது பரிசோதனை:
சர்க்கரை நோயைக் கண்டுபிடிக்க இன்று வரை வெறும் வயிற்று சர்க்கரை அளவு பரிசோதனையும், சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து சர்க்கரை அளவு பரிசோதனையும் உடலில் குளுகோஸ் தாங்கும் திறனைக் கண்டுபிடிப்பது என்ற நிலை மாறி இப்போது சர்க்கரை நோய் உள்ளதா இல்லையா என்பதை துல்லியமாக தெரிய புதிய முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட பரிசோதனை எந்நேரமும செய்யலாம். 6 முதல் 6.5 சதவீதம் இருந்தால் சர்க்கரை நோய் வரும் வாய்ப்பு. 6 சதவீதம் சர்க்கரை நோய் இல்லை 6.5 சதவீதத்துக்கு மேல் நோய் உள்ளது. இது எப்படி கரோனரி நோய்க்கு ஆஞ்சியோகிராம் கோல்டு ஸ்டென்டோ அதுபோல சர்க்கரைக்கு இது முக்கிய டெஸ்ட்.
ரத்தக்குழாய் அடைப்பு:
சர்க்கரை நோய் உள்ளவர்கள் கட்டுப் பாட்டில் இருந்தால் கரோனரி ரத்தக் குழாய் அடைப்பு எப்படி இருக்கும் என்பதை தெரிய வேண்டும். (ஏ) ஐந்து ஆண்டுகள் உள்ளவர்களும் 20 முதல் 30 சதவீதம் வரை அடைப்பு இருக்கலாம். (பி) பத்து ஆண்டுகள் சர்க்கரை நோய் இருந்தால் 90 சதவீத அடைப்பு. ஒரு இடத்தில் அல்லது பல இடத்தில் அடைப்பு இருக்கலாம்.
(சி) 10 ஆண்டு முதல் 20க்குள் இருந்தால் அடைப்பு ஒரு இடத்தில் மட்டுமல்லாது ரத்தக் குழாய் முழுவதும் அடைப்பு இருக்கும். ஒரு குழாய் மட்டுமல்லாது பல குழாய் அடைப்பு இருக்கும். (டி) சர்க்கரை நோயினால் ரத்தக் குழாய் சிறுத்துப் போய் கரோனரி ரத்தக் குழாய் விட்டம் 2 மில்லி மீட்டர் அதற்கு குறைவாக இருக்கும். இது பரிதாபமான நிலை.
பைபாஸ் கிராப்ட் உள்ளவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வீனஸ் கிராப்ட்டுக்கு சில காலம் வரை நன்றாக இருக்கும். அதற்கு மேல் வீனஸ் கிராப்ட் மூட வாய்ப்புள்ளது. பல ஆண்டுகள் வரை கிராப்ட் மூடாமல் இருப்பதைப் பார்த்து இருக்கிறேன்.
வீனஸ் கிராப்ட் இது இணைப்பு தான். லீமா, ரிமா என்ற ஆர்ட்டியல் கிராப்ட் கரோனரி ரத்தக் குழாய் போல் இயங்கும். வீனஸ் கிராப்ட் இணைப்பில் ரத்தம் உறைந்து மூடிவிடும். வீனஸ் கிராப்ட் நாளாவட்டத்தில் செயலிழக்கும். இந்த ஸ்டென்ட் எளிதில் மூடிவிடும். மறு பைபாஸ் சிறந்தது. ஸ்டென்ட் அடைக்காமல், ஸ்டென்ட்டையும் மிகவும் பாதுகாக்க வேண்டும். இதில் கவனமாக இருக்க வேண்டும். தனி மனித ஒழுக்கம், வாழ்க்கை முறை மாற்ற வேண்டும்.
சந்தோஷமாக வாழ கற்றுக்கொள்ளுங்கள்:
சர்க்கரை வியாதியுள்ளவர்கள் பல விளைவுகளோடு வாழ கற்றுக்கொள்ள வேண்டும். வாழ்வில் வியாதி வந்தது என்று கவலைப்பட்டு சோம்பேறியாய் மூலையில் இருப்பது நல்லதல்ல. சலிப்பு, வெறுப்பு இவைகள் அதிகமாக தாழ்வு உணர்ச்சி மேலோங்கி தற்கொலைக்கு தூண்டும். பல் தேய்த்து, குளிப்பது போல சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைக்க தினமும் ஒரு தடவை நினைத்து சந்தோஷமாக வாழ கற்றுக்கொள்ளுங்கள்.

கோடைக்கேற்ற உணவு...


கோடையின் பாதிப்பால் எளிதாக சில நோய்களும் வந்து விடுகின்றன. கோடைக்கேற்ற உணவு வகைகளை சாப்பிட்டால் அந்த நோய் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம்.
கோடைக்காலத்தில் நீர்ச்சத்து அதிக அளவில் தேவைப்படும். காய்கறிகளில் நீர்ச்சத்து அதிகம் காணப்படுகிறது. காய்கறிகளை முடிந்தவரை பச்சையாகவோ அல்லது லேசாக வேக வைத்தோ உட்கொண்டால்தான் அதிக அளவிலான நீர்ச்சத்தை நாம் பெற முடியும். காய்கறிகளைப் போன்று பழங்களிலும் நிறைய நீர்ச்சத்து உள்ளது.
காய்கறிகளையும், பழங்களையும் இந்த கோடையில் எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக உட்கொள்கிறோமோ அந்த அளவுக்கு நல்லது. கோடை வெயிலில் சிறிது தூரம் நடந்தாலே வியர்த்துக் கொட்டிவிடும். அப்புறம் என்ன... அரிப்பு தான்! வெங்காயத்தை உணவில் அதிக அளவில் சேர்த்துக் கொண்டால் வெப்பத்தால் ஏற்படக்கூடிய அரிப்பு வராது. வெங்காயத்தில் உள்ள 'குவர்சடின்' என்று வேதிப்பொருள் அதற்கு உதவுகிறது.
இப்போது தர்பூசணி பழங்கள் நிறைய கிடைக்கும். அந்த பழத்தில் இருப்பது 90 சதவீதம் தண்ணீ­ர் தான். தர்பூசணி போன்று வெள்ளரிக்காயிலும் நிறைய நீர்ச்சத்து உள்ளது. அதனால், இவற்றை அதிக அளவில் சாப்பிடுங்கள்.
காய்கறிகளைக் கொண்டு 'சூப்' தயார் செய்து, அதை குளிர வைத்து உட்கொள்வதும் சிறந்தது என்கிறார்கள், அமெரிக்க டாக்டர்கள். வாழைப்பழம் நிறைய சாப்பிடுவதும் கோடைகாலத்தில் நல்ல உடல்நலத்தை தக்கவைக்கும். வெயிலின் தாக்கம் தாங்காமல் நாம், குளிராக எது கிடைத்தாலும் குடிப்போம், சாப்பிடுவோம். நம்முடைய பலவீனத்தைத் தெரிந்து கொண்டுதான் கலர், கலரான குளிர்பானங்களை எல்லாக் கடைகளிலும் விற்கிறார்கள். தாகம் அடங்க வேண்டும் என்பதற்காக, அவற்றை அதிக விலை கொடுத்து வாங்கி உபயோகிக்கிறோம்.
இந்த கலரான குளிர்பானங்களால் உடலில் தேவையற்ற கலோரி தான் சேருமே தவிர, வேறு எந்தவித பலன்களும் கிடையாது என்கிறார்கள் டாக்டர்கள். இப்போதெல்லாம் ஐஸ் காபி, ஐஸ் டீ ஆகியவையும் அமோகமாக விற்பனையாகின்றன. ஆரோக்கியம் கருதி இவற்றை தவிர்ப்பது நல்லது. எண்ணெயில் பொரித்து எடுக்கும் சைவ மற்றும் அசைவ உணவு வகைகளை இந்த கோடையில் முடிந்தவரை தவிர்ப்பது இன்னொரு ஆரோக்கிய ரகசியம்.
வெளியில் வெயிலில் வெளியே செல்ல நேரிட்டால் சுத்தமான குடிநீரை கையோடு கொண்டு செல்லுங்கள். இல்லையென்றால், இயற்கை பானமான இளநீரை வாங்கி குடியுங்கள்.
மோர், எலுமிச்சை பழச்சாறு ஆகியவையும் நல்லதுதான். அதேநேரம், அவற்றில் சேர்க்கப்படும் தண்­ணீர் சுத்தமானதாக இருக்க வேண்டும். முடிந்தவரை, அவற்றை நீங்களே வீட்டில் தயார் செய்து உட்கொள்வதுதான் சிறந்தது.
தினமும் 2 டம்ளர் மோர் குடித்து வாருங்கள். வறண்ட சருமம் நீங்கி தோல் பொலிவு பெறும். தோல் நீக்கிய ஆப்பிள் பழத்தை நன்றாக மசித்து, அதனுடன் சிறிது தேன், ஓட்ஸ் பவுடர் ஆகியவற்றை கலந்து, அந்த கலவையை முகத்தில் பூசி சுமார் அரை மணி நேரம் ஊறவிட்டு, முகத்தை கழுவவும். வெயிலின் தாக்கத்தால் பாதிப்புக்குள்ளான உங்கள் வறண்ட சருமம் பொலிவு பெறும்.
தினமும் காலை, மாலை இருவேளை குளியுங்கள். காலைக்குளியலின் போது மட்டும் தலை மற்றும் உடல் முழுவதும் தேங்காய் எண்ணெய் தேய்த்து, நன்றாக ஊறவிட்டு, அதன்பின் குளிப்பது நல்லது. இப்படிச் செய்வதால் உடல்சூடு குறையும். மாலையில் எண்ணைக்குளியல் ஆகவே ஆகாது.
கோடையில் கண்கள் எளிதில் சோர்ந்து போய்விடுவதால் எரிச்சல் கொடுக்க ஆரம்பித்துவிடும். அதைப் போக்க, இரவில் தூங்கும்முன் கண்களை சுற்றி விளக்கெண்ணெயை தடவி விடுங்கள். கண்கள் குளிர்ச்சி பெறும்.

எடையை குறைக்கணுமா...?


உங்களுக்கு எதை உண்ணப் பிடிக்குமோ, அதைத் தவிருங்கள். இது கொஞ்சம் கஷ்டம்தான். முதல் நான்கு நாட்கள் மிக கடினம் போல தோன்றும். முழுமையாகத் தவிர்க்க முடியாவிடினும், சிறிது சிறிதாகத் தவிர்க்கப் பாருங்கள். முழுமையாகத் தவிர்த்தபின் உங்கள் ஆர்வம் குறையத் தொடங்கியிருப்பதை நீங்களே உணர்வீர்கள்.
மூச்சுப் பயிற்சி செய்வதன்மூலம் மன இறுக்கத்தைப் போக்கலாம். மனஇறுக்கம்கூட அதிகப்படியான உணவு உண்பதற்கு ஒரு காரணம்.
உடல் தளர்ச்சியின்போது உண்ணும் எண்ணம் தோன்றலாம். அச் சமயங்களில் கதவை அடைத்து, கண்களை மூடி ரிலாக்ஸ் செய்யுங்கள். குறிப்பாக சமையலறை பக்கம் போகாமல் ஏதாவது வேலைகளில் ஈடுபடலாம்!
கொழுப்பு நிறைந்த உணவுகளை உண்ணும் முன் உங்கள் எடையையும் உடலையும் ஒருமுறை நினைத்துப் பாருங்கள்.
இரண்டு தம்ளர் தண்ணீ­ர் மற்றும் 25 கிராம் நட்ஸ் (பாதாம், நிலக்கடலை, வால்நட்) சாப்பிடலாம். இருபது நிமிடங்களில் தீனி உண்ணும் உங்கள் எண்ணத்தை அழித்து உங்கள் உடல் ரசாயனத்தை மாற்றிவிடும்.
(குறிப்பு: உலர் பருப்புகள் உடலுக்கு நல்லதல்ல என்ற தவறான எண்ணம் உண்டு. தினமும் சிறிதளவு உலர் பருப்புகள் எடுத்துக்கொள்வது உடல் எடையைக் குறைக்கும் என்பது ஆய்வில் நிரூபணமாகியுள்ளது.)
கொழுப்பு நீக்கப்பட்ட பாலை உபயோகிக்கவும்.
எப்போதும் வாய் சுத்தமாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும். தேவையெனில் மவுத்வாஷ் உபயோகிக்கலாம். வாய் - சுத்தமாக இருக்கும்போது, கண்டதை உண்ணும் எண்ணம் தோன்றாது.
தீனி உண்ணும் எண்ணம் பத்து நிமிடங்களுக்கு மேல் நீடிக்காது. எனவே அந்த பத்து நிமிடங்கள் உங்கள் மனதை பாட்டு கேட்பதன் மூலமோ, உடற்பயிற்சி செய்வதன் மூலமோ அல்லது தியானிப்புகள் மூலமோ திசை திருப்பலாம்.
பசிக்கும் போதெல்லாம், பப்பாளி, வெள்ளரிக்காய், தக்காளி போன்றவற்றை சாலட் செய்து சாப்பிட்டு, ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீர் குடித்து வந்தால் நாளடைவில் உடல் எடை குறையும்.
கல்யாண விருந்துகளைக் கட்டாயம் தவிர்க்கவும். ஒரு வேளை, மிக அவசியமான விருந்து நிகழ்ச்சி என்றால், காய்கறி, கீரை சூப் என பாதி வயிறு நிறைத்துக் கொண்டு செல்லுங்கள். இதனால் ஐஸ்க்ரீம், ஸ்வீட்ஸ் என கண்டபடி சாப்பிடத் தோன்றாது.
உடற்பயிற்சியின் அவசியத்தைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. உடலின் ஆரோக்கியத்திற்கும், இளமைக்கும் உடற்பயிற்சி தேவையான ஒன்று. இதற்கென தனியே நேரம் செலவிட இயலாவிடினும் வீட்டுவேலை, படியேறுதல் மற்றும் தோட்டக்கலை போன்றவற்றில் நம்மை ஈடுபடுத்திக்கொள்வதே, சிறந்த உடற்பயிற்சியாகும். இவை எவ்வளவு கலோரிகளை எரிக்கின்றன. எவ்வளவு எடையைக் குறைக்கின்றன தெரியுமா? படியுங்கள் கீழே...!
மன அழுத்தம்கூட உடல் எடை கூட காரணமாகலாம். உடற்பயிற்சியின்போது சுரக்கும் எண்டோர்ஃபின் என்னும் ஹார்மோன் மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகின்றது. மேலும் டிரிப்போஃபேன் என்னும் அமினோ அமிலம் நிறைந்த சோயா பால் பொருட்களும் மன அழுத்தத்தைக் குறைக்கும். இதனால்தான் நாம் டென்ஷனாக இருக்கும்போது காஃபி குடித்தால் சற்று ரிலாக்ஸ்டாக உணர்கிறோம். இப்போது புரிகிறதா?
வேலை எடுத்துக்கொள்ளும் நேரம் செலவழிக்கப்பட்ட கலோரிகள்/ ஒரு வாரத்துக்கு
எடை குறைவு/ ஒரு வருடத்தில் (கிலோ கிராம்)
மதிய உணவுக்குப் 10 நிமிடங்கள்
பின் ஒரு நடை வாரம் 5 முறை 170 1.25
பயிற்சி:
படியேறுதல் 5 நிமிடங்கள்,
வாரம் 5 முறை 225 1.50
வீட்டுவேலை 2 மணிநேரம்
வாரத்துக்கு 408 3.90
குழந்தைகளுடன் 1 மணி நேரம்
விளையாட்டு வாரம் 3 முறை 612 4.50
தோட்ட வேலை 2 மணி நேரம்
வாரத்துக்கு 712 5.00
நடனம் 2 மணி நேரம்,
வாரத்துக்கு 816 6.00

வயிற்றில் புண்ணா...?


வயிற்றுப்புண் இருவகையில் ஏற்படுகிறது. அவை உணவு முறை, மன அழுத்தம்: உணவு முறையில் மாறுபாடு கொண்டவர்களில் முதலில் பாதிக்கப்படும் உறுப்பு வயிறுதான். நேரம் கடந்த உணவு, அதிக பட்டினி, எளிதில் ஜீரணமாக உணவு, அதிக உணவு போன்ற காரணங்களால் வயிற்றில் புண் உண்டாகிறது. அதுபோல் மன அழுத்தம், மன எரிச்சல், அதிக கோபம், பயம், வெறுப்பு இவைகளாலும் வயிற்றில் புண் உண்டாகிறது. மலச்சிக்கல், அஜீரணக் கோளாறும் வயிற்றில் உள்ள அபாய வாயுவை சீற்றமடையச் செய்து வயிற்றுப்புண்ணை உண்டாக்குகிறது.
* அதுபோல் மனம் சம்பந்தப்பட்ட காரணங்களால் இயல்புக்கு மாறாக சுரப்பிகள் அதிகம் நீரைச் சுரந்து வயிற்றுப் பாதிப்பை உருவாக்குகிறது.
* உணவை நன்கு மென்று சாப்பிட வேண்டும்.
* அதிக சூடான பானங்களை, குடிக்கக்கூடாது. அதுபோல் வேகமாகவும் அருந்தக்கூடாது.
* சூடான உணவுப்பொருட்களை சாப்பிடக்கூடாது.
* அதிக குளிரூட்டப்பட்ட உணவுகளையும் தவிர்ப்பது நல்லது.
* புளி, காரம் இவற்றை கண்டிப்பாக குறைத்துக்கொள்ள வேண்டும்.
* மது, போதை, புகை போன்றவை இரைப்பையை பாதித்து, குடல்களில் புண்களையும் உண்டாக்கும்.
* எளிதில் ஜீரணமாகாத உணவுகளை தவிர்த்து, எளிதில் ஜீரணமாகும் உணவுகளை உண்ண வேண்டும்.
* பசித்த பின் உணவு அருந்த வேண்டும். அதிகமாக உணவு அருந்தக்கூடாது.
* அதிகமாக புளித்துப்போன உணவுகளைச் சாப்பிட வேண்டாம். இரவில் புளித்த தயிர், மோர் கெடுதலை ஏற்படுத்தும்.
* கோபம், டென்சன், எரிச்சல், அதிக பயம் இவற்றை குறைத்துக்கொள்ள வேண்டும்.
* தினமும் குறைந்தது 2 லிட்டர் தண்­ணீராவது குடிக்க வேண்டும்.
மேற்கண்ட நடைமுறைகளை சரியாக கடைப்பிடித்து வந்தால் வயிற்றுப்புண் ஏற்படாமல் ஆரோக்கியமாக வாழலாம்.

தோலுக்கு மினு மினுப்பை தரும் சைவ உணவுகள்!


சைவ உணவுகளை எடுத்துக்கொள்வது உங்களது உடல் நலனுக்கு எந்தெந்த வகையிலெல்லாம் நல்லது என்பது குறித்து மருத்துவ மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் தரும் விளக்கம் இங்கே:
நச்சுக்களை அகற்றுபவை:
நார்சத்து மிகுந்த சுரைக்காய், பூசணி, பசலைக்கீரை மற்றும் முட்டைகோஸ் ஆகியவை சைவ உணவ வகைகளில் மிக முக்கியமானவை. உடலில் சேரும் நச்சுகளை அகற்றும் திறன் மேற்கூறிய காய்கறிகளுக்கு உண்டு. அதே சமயம் முட்டை, மீன் மற்றும் இறைச்சி போன்றவற்றில் புரதச்சத்து இருக்கும் அளவுக்கு நார்ச்சத்து இருப்பதில்லை.
எலும்புகளை வலுவாக்குபவை:
இறைச்சி உடலில் புரதத்தை அதிகமாக்கி, கொழுப்பை கூட்ட வழி வகுக்க கூடியது. மேலும் நமது சிறுநீரகத்திற்கு அதிக வேலைப் பளுவை ஏற்படுத்த செய்வதோடு, எலும்பிலுள்ள கால்சியத்தையும் உறிஞ்சி விடுகிறது. அதே சமயம் சைவ உணவில் இந்த பிரச்சினை இல்லை.
கார்போஹைட்ரேட் பற்றாக்குறை:
அசைவ உணவு அதிகம் எடுத்துக்கொள்பவர்களுக்கு கார்போஹைட்ரேட் பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்பும் அதிகம் உண்டு. இதனால் உடல் தனது இயக்கத்திற்கு தேவையான சக்தியை கார்போஹைட்ரேட்டிலிருந்து பெறுவதற்கு பதிலாக சேமித்து வைக்கப்பட்டுள்ள கொழுப்பிலிருந்து எடுத்துக்கொள்ளும் கீட்டோனியம் என்ற நிலை ஏற்படும்.
எளிதில் ஜீரணம்:
சைவ உணவுகள் மூலமாக கிடைக்கும் ஹார்போஹைட்ரேட் படிப்படியாக ஜீரணமாக உடலுக்கு தேவையான குளுகோஸ் சத்தை சீராக அளிக்கும். அதே சமயம் கொழுப்பும், புரதமும் அதிகம் நிறைந்த இறைச்சி உணவு ஜீரணமாகவே அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். சில சிமயங்களில் சிலருக்கு அது சிரமமாக கூட ஆகிவிடும்.
ஆரோக்கியமான மேனி:
பீட்ரூட், தக்காளி, பூசணி, பாகற்காய் போன்ற சைவ உணவுகள் ரத்தத்தை நன்கு சுத்திகரிப்பதோடு, தோலுக்கு மினு மினுப்பையும் கொடுக்கிறது. அத்துடன் கொய்யா, ஆப்பிள், பேரிக்காய் போன்ற பழங்களை உண்பதும் மேனிக்கு மினுமினுப்பை கூட்டும்.

இதய ஆரோக்கியத்துக்கு.....


கேள்விப்படும்போது பயங்கரமா தான் இருக்கும். ஹார்ட் அட்டாக் வந்துட்டதால, அதோட எல்லாமே முடிஞ்சு போச்சுன்னு நினைச்சு, வாழ்க்கையை வெறுக்க வேண்டியதில்லை. ரெண்டு, மூணு முறை அட்டாக் வந்து பிழைச்சு, நிறைய காலம் ஆரோக்கியமா வாழறவங்களும் இருக்காங்க. வந்ததை நினைச்சு பயப்படாம, அடுத்து எப்படி இருக்கணும், அதுக்கு என்ன சாப்பிடணும், எப்படி சாப்பிடணும்னு தெரிஞ்சுக்க வேண்டியது அவசியம்.
இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் யாருக்கெல்லாம் வர வாய்ப்பு அதிகம்?
நீரிழிவு உள்ளவங்க, சிறுநீரகக் கோளாறு உள்ளவங்க, சிகரெட் பழக்கமுள்ளவங்க, உடல் பருமனானவங்க, மொனோபாஸ் கடந்தவங்க, எப்போதும் டென்ஷனா இருக்கிறவங்க, எந்த வேலையும் செய்யாம உடல் இயக்கமே இல்லாதவங்க, ஏற்கனவே குடும்பத்துல யாருக்காவது இதய நோய்கள் இருக்கிறவங்க, இவங்க எல்லாம் ஜாக்கிரதையா இருக்கிறது நல்லது.
இதய நோய்க்கான அறிகுறி நெஞ்சு வலியாதான் இருக்கணும்ணு அவசியமில்லை. அடிக்கடி தலைவலி, தலை சுற்றல், பார்வைத் தடுமாற்றம், ஞாபகமறதி, மூச்சு விடறதால சிரமம், தோள்பட்டை வலி. இதுல எது இருந்தாலும், அது இதய நோய்க்கான அறிகுறியாகவும் இருக்கலாம்னு உடனே டாக்டரை பார்க்கிறது அவசியம். சிகிச்சை, உடற்பயிற்சி, இது எல்லாத்தையும் விட முக்கியம் உணவு. அமெரிக்கால எல்லா உணவுகள்லயும் 'டிரான்ஸ்ஃபேட்'னு சொல்லப்படற அடர்த்தி குறைவான மிதக்கும் கொழுப்பு இருக்காங்கிறதை பேக்கிங் லேபிள்ல போடணும்னு சட்டம் இருக்கு. நம்மூர்ல அப்படி எதுவும் இல்லாதது பெரிய குறை.
எதை சாப்பிடலாம், எது கூடாதுங்கிற விழிப்புணர்வு இல்லாம, கண்டதையும் சாப்பிட்டு நோய்களை விலை கொடுத்து வரவழைச்சுக்கறோம். சாப்பாட்டு விஷயத்துல ரொம்ப முக்கியமா கவனிக்க வேண்டியது ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ், சில வகை உணவுகளை சமைக்கிறபோதே, சத்துகள் ஆக்சிஜனோட சேர்ந்து ஆவியாகி வெளியேறிவிடும். அதைத் தடுக்க ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் அவசியம். கிரீன் டீ, பழங்கள், காய்கறிகள்ல இந்த ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் அதிகமா இருக்கு. உடம்புல கொழுப்பு அதிகமா இருக்கிறப்ப, ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் தங்காது. கூடவே நச்சுப் பொருளும் சேர்ந்து உண்டாக்கிற கோளாறுகள்ல இதய நோயும் ஒன்று. காய்கறிகளும் பழங்களும் எல்லாருக்கும் அவசியம்னு சொல்ல இது இன்னொரு காரணம்.
இதயம் பலவீனமானவங்க தவிர்க்க வேண்டிய உணவுகள்:
* மீன் தவிர அத்தனை அசைவ உணவுகளையும்.
* ஒரு முட்டைல 210 மி.கி. கொலஸ்ட்ரால் இருக்கிறதால, அது கூடவே கூடாது.
* பேக்கிங் பவுடர் சேர்த்துச் செய்தவை, நெய், வெண்ணெய், சீஸ், தேங்காய், காபி, டீ, உருளைக்கிழங்கு சிப்ஸ், டின்ல அடைச்ச உணவுகள், தக்காளி சாஸ் கெட்ச்சப், ஃப்ரோஸன் உணவுகள் - அதாவது உறைநிலை உணவுகள், அஜினோமோட்டோ இந்த எதுவும் வேண்டாம்.
* 'ஊறுகாயும் அப்பளமும் இருந்தா போதும், வேற எதுவும் வேணாம்'னு சாப்பிறவங்க பலர். இந்த ரெண்டையும் போல ஆபத்தானது வேற இல்லை. காரணம், அதுல சேர்க்கப் படற உப்பு. அந்தக் காலத்துல அப்பளம் நல்லா விரிஞ்சு பொரியணும்னு பிரண்டை சாறு விடுவாங்க. இப்ப அதுக்குப் பதில் சோடியம். ஊறுகாயும் அதே மாதிரிதான். அதிக உப்பு ரத்தக்கொதிப்பை அதிகமாக்கி, இதய நலனைப் பாதிக்கும்.
சாப்பிடக்கூடிய உணவுகள்:
* கீரை, முழு தானியங்கள், காய்கறிகள்,
* அசைவத்துல மீன் மட்டும் (அதுல உள்ள ஒமோக 3 கொழுப்பு அமிலம் இதயத்துக்கு நல்லது)
* ஓட்ஸ், பூண்டு, சின்ன வெங்காயம்.
* தினசரி சமையல்ல சாதாரண புளிக்குப் பதிலா கொடம்புளி உபயோகிக்கலாம். கோக்கம்னு சொல்லப்படற கொடம்புளியை எந்தவித குழம்புலயும் சேர்க்கலாம். ரத்தத்துல கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தி, இதயத்தைப் பாதுகாத்து, உடல் எடையையும் குறைக்கும் இது. கொழுப்பு குறைஞ்சாலே, இதயம் உள்ளிட்ட அத்தனை உறுப்புகளும் ஆரோக்கியமாக இருக்கும்.

வைட்டமின் என்றால் என்ன?


செயல்படுவதற்கு பலவகையான பொருட்கள் அதற்குத் தொடர்ந்து தேவைப்படுகின்றன. தொடர்ந்து மூச்சுவிடுவதன் மூலமும், சாப்பிடுவதன் மூலமும் அந்தப் பொருட்களை நம்முடைய உடலுக்கு நாம் வழங்கி வருகிறோம்.
வளர்ச்சி, பழுதுபார்ப்பு மற்றும் ஆரோக்கியம் பேணுதல், அவற்றுக்குத் தேவையான ஆற்றல் - இவைதான் மனித உடலின் அடிப்படைத் தேவைகள்.
மனித உடல் பலவகையான திசுக்களால் ஆனது என்றாலும் அவற்றுக்கெல்லாம் அடிப்படையாக இருப்பது செல்கள்தான். இந்த செல்களில் நிகழும் பல்லாயிரக்கணக்கான வேதிவினைகள்தான் மனித உடலின் வளர்ச்சிக்கும், பழுதுபார்ப்பு மற்றும் ஆரோக்கியம் பேணுவதற்கும், அவற்றுக்குத் தேவையான ஆற்றலைப் பெறுவதற்கும் காரணமாக இருக்கின்றன.
உடலின் வளர்ச்சி, பழுதுபார்ப்பு மற்றும் ஆரோக்கியம் பேணுவதற்கு புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுப் பொருட்கள் போன்ற பலவகையான பொருட்கள் தேவைப்படுகின்றன. உண்ணும் உணவிலிருந்து உடல் இவற்றைப் பெறுகின்றது.
உடலின் மற்ற செயல்கள் நிகழ்வதற்கு தேவைப்படும் ஆற்றலைப் பெற தரசமும், ஆக்சிஜனும் உடலுக்கு தேவைப்படுகின்றன. உண்ணும் உணவிலிருந்து தரசத்தை (மாவுப் பொருள்) உடல் எடுத்துக்கொள்கிறது. மூச்சுக் காற்றிலிருந்து தேவையான ஆக்சிஜன் எடுத்துக்கொள்ளப்படுகிறது.
இதுதான் மனித உடலின் அடிப்படையான இயங்குமுறை. இது பற்றி இப்போது மிகவும் விரிவாகவும், நுட்பமாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
ஆனால், சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு வரையில்கூட மனித உடலின் உணவுத் தேவை பற்றி எதுவும் கண்டறியப்பட்டிருக்கவில்லை. சில குறிப்பிட்ட உணவுப் பொருட்கள் உடல் ஆரோக்கியத்திற்கு உதவுவதை மட்டுமே மனிதர்கள் அறிந்திருந்தனர். அந்த உணவுப் பொருட்களில் என்னென்ன உணவுச் சத்துகள் இருக்கின்றன என்பது பற்றி எதுவும் தெரியாது.
பின்னர், பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பொருட்களை வேதியல் முறையில் பகுத்தாய்வதில் வளர்ச்சி ஏற்படத் தொடங்கியது. இதனால், இயற்கையாக கிடைக்கக் கூடிய பொருட்களை அவற்றின் சுத்தமான வடிவத்தில் பிரித்தெடுப்பதும், அவற்றின் வேதியல் அமைப்பை கண்டறிவதும், அவற்றை செயற்கையான முறையில் உற்பத்தி செய்வதும் சாத்தியமானது.
அந்த வளர்ச்சியின் விளைவாக, ஆராய்ச்சியாளர்களால் உணவிலுள்ள சத்துப் பொருட்களை அவற்றினுடைய சுத்தமான வடிவத்தில் பிரித்தெடுக்க முடிந்தது. அதனால், இதுபோல சுத்தமான வடிவத்தில் பிரித்தெடுக்கப்பட்ட உணவுச் சத்துகள் உடலில் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை மிகவும் துல்லியமாக பரிசோதித்தறிவதும் சாத்தியமானது.
இதுபோன்ற முறையில், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தரசம் (மாவுப் பொருள்), புரதம், கொழுப்பு, தாதுப் பொருட்கள் ஆகிய உணவுச் சத்துகள் உடலின் ஆரோக்கியத்திற்கு தேவைப்படுகின்றன என்பதை ஆராய்ச்சியாளர்கள் மிகவும் திட்டவட்டமாக கண்டறிந்தனர். இந்த உணவுச் சத்துகள் அவற்றின் சுத்தமான வடிவத்தில் பிரித்தெடுக்கப்பட்டு அவற்றின் வேதியல் அமைப்புகளும் கண்டறியப்பட்டன. அதேபோல, அவற்றை செயற்கையாக தயாரிக்கும் முறைகளும் கண்டறியப்பட்டன.
இந்த நிலையில் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சில ஆராய்ச்சியாளர்கள் சோதனை பிராணிகளுக்கு இந்த உணவுச் சத்துகளை அவற்றின் சுத்தமான வடிவத்தில் கொடுத்து அவை உடலில் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை ஆராய்ந்து வந்தனர்.
ஆனால், இந்த உணவுச் சத்துகளை மட்டும் அவற்றின் சுத்தமான வடிவத்தில் தேவையான அளவுகளில் சோதனை பிராணிகளுக்கு கொடுத்து பரிசோதித்தபோது அவை விரைவிலேயே உடல் நலம் குன்றி உயிரிழப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டனர்.
எனவே, இந்த உணவுச் சத்துகளைத் தவிர வேறு ஏதோ சில உணவுச் சத்துகளும் மிகவும் குறைந்த அளவில் உயிர் வாழ்க்கைக்கு கட்டாயமாக தேவைப்படுகின்றன என்று அவர்கள் முடிவு செய்தனர்.
அது போன்ற அடையாளம் கண்டறியப்படாத உணவுச் சத்துகளுக்கு துணை உணவு காரணிகள் (Accessory Food Factors) என்று பெயர் சூட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து அந்த துணை உணவு காரணிகளைக் கண்டறியும் முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள் மிகத் தீவிரமாக ஈடுபடத் தொடங்கினர்.
இந்த நிலையில், சில ஆராய்ச்சியாளர்கள் துணை உணவு காரணிகள் சிலவற்றைக் கண்டறிந்தனர். உயிர் வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமான ஒரு அமைனை (Amine - அமைன் என்பது வேதிப் பொருட்களில் ஒரு வகை) கண்டுபிடித்து விட்டதாக அவர்கள் நம்பினர். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் அந்தப் பொருளுக்கு விட்டமைன் (Vital + Amine = Vitamine) என்று பெயர் சூட்டினர். அதைத் தொடர்ந்து மற்ற விட்டமைன்களைக் கண்டறியும் ஆராய்ச்சி முழு வேகமடைந்தது.
நூற்றுக்கணக்கானவர்கள் அந்த ஆராய்ச்சியில் ஈடுபடத் தொடங்கினர். அதன் விளைவாக பல துணை உணவுக் காரணிகள் கண்டறியப்பட்டன. பின்னர் அவற்றின் பெயர் வைட்டமின் என மாற்றப்பட்டது.
வைட்டமின் என்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமாக தேவைப்படும் ஒரு சத்துப்பொருள். பெரும்பாலான வைட்டமின்கள் வளர்சிதை மாற்றச் செயல்களில் முக்கியப் பங்கு எடுத்துக்கொள்கின்றன. எனவே, வைட்டமின்கள் பற்றாக் குறையாகும்போது சில முக்கியமான வளர்சிதை மாற்றச் செயல்கள் நிகழாமல் போகின்றன. இதனால், உடல் பலவிதமாக பாதிக்கப்படுகிறது.
வைட்டமின்கள் அவை செயல்படும் விதத்தில் ஹார்மோன்களையும், என்சைம்களையும் ஓரளவு ஒத்திருக்கின்றன. ஆனால், அவை கிடைக்கும் விதத்தில் வித்தியாசம் இருக்கிறது.
அதாவது, ஹார்மோன்களையும், என்சைம்களையும் நாம் உட்கொள்ளும் உணவிலுள்ள வேறு பொருட்களைப் பயன்படுத்தி உடலே தயாரித்துக்கொள்கிறது. ஆனால், வைட்டமின்களை அது போல நமது உடலால் தயாரிக்க இயலாது. வைட்டமின்களைத் தயாரிக்கும் திறனை நமது உடல் இழந்து விட்டது. (வேறு உயிரினங்களுக்கு அந்த திறன் இருக்கிறது.)
எனவே, வைட்டமின்கள் அதே வடிவில் நமது உடலுக்குத் தேவைப்படுகின்றன. அதாவது வைட்டமின்களைத் தயார் நிலையில் நாம் நமது உடலுக்கு வழங்க வேண்டியதிருக்கிறது. இதுபோல தயார் நிலையில் நமது உடலுக்குத் தேவைப்படும் ஊட்டச்சத்துகள் வைட்டமின்கள் என்று அழைக்கப்படுகின்றன.
இந்த காரணத்தினால் நமக்கு வைட்டமினாக இருக்கும் ஒரு பொருள் வேறு உயிரினங்களுக்கு வைட்டமினாக இருப்பதில்லை. அதாவது வேறு உயிரினங்களுக்கு அந்தப் பொருள் தயார் நிலையில் தேவைப்படுவதில்லை. உணவில் உள்ள வேறு பொருட்களிலிருந்து அந்த உயிரினங்களின் உடலே அதை தயாரித்துக்கொள்ளும்.
எனவே, வைட்டமின்கள் எனறால் தயார் நிலையில் நமது உடலுக்கு தேவைப்படும் உணவுச் சத்துகள் என்று கூறலாம். வைட்டமின்கள் பொதுவாக மிகக் குறைந்த அளவில்தான் நமது உடலுக்குத் தேவைப்படுகின்றன. அந்த மிகக் குறைந்த அளவும் கிடைக்காதபோதுதான் அவற்றின் பற்றாக்குறையால் மனித உடல் பலவிதமாக பாதிக்கப்படுகிறது.

நீரிழிவு நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாமா?


தெருவெல்லாம் மாம்பழம் குவியத் தொடங்கிவிட்டது. சிறுவர் முதல் பெரியவர் வரை வயது வித்தியாசமில்லாமல் வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் யாரெல்லாம் மாம்பழம் சாப்பிடலாம், எத்தனை சாப்பிடலாம் என்றெல்லாம் பலருக்கும் தெளிவாகத் தெரியவில்லை. நீரிழிவு நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாமா, கூடாதா என்ற சந்தேகத்துடன் மாம்பழத்தையே பரிதாபமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தியாவின் முக்கியமான பழங்களில் ஒன்று மாம்பழம், இல்லாவிட்டால் முக்கனிகளில் ஒன்றாக்கி அதற்கு முக்கியத்துவம் கொடுத்திருப்போமா! இந்தியாவில் மட்டும் 1000 வகை மாம்பழங்கள் இருக்கு. தமிழ்நாட்டு மார்க்கெட்டுகளிலேயே ருமானி, அதிமதுரம், முண்டப்பா பஞ்சவர்ணம், நீலம், பங்கனப்பள்ளி, ஒட்டு மாம்பழம்னு பட்டியல் நீளமா போய்க்கிட்டே இருக்கும்.
மாம்பழங்களில் அதிக அளவில் கரோட்டீன் சத்து உள்ளது. அல்போன்சா வகை மாம்பழத்தில் எக்கச்சக்கமான பீட்டா கரோட்டீன் (Carotene) சத்தும், பங்கனப்பள்ளி மற்றும் பெத்தராசலு வகைகளில் மிதமான அளவு பீட்டா கரோட்டீன் (Carotene) சத்தும் உள்ளதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. எனவே மாலைக்கண் போன்ற கண் தொடர்பான நோய்களுக்கு மாம்பழம் சாப்பிடுவது நல்லது.
தினமும் ஒரு மாம்பழம் சாப்பிட்டால் உடலில் இரத்த ஓட்டம் சீராகி நரம்புத் தளர்ச்சி நீங்கி உடல் வலுவடையும். காரணம் மாம்பழத்திற்கு இரத்தத்தில் உள்ள நச்சுக் கிருமிகளை அழிக்கும் ஆற்றல் உண்டு. இது மட்டுமல்ல, இதயத்தையும், மூளையையும் பலப்படுத்தி நோய் எதிர்ப்புச் சக்தியையும் அதிகரிக்கும். கர்ப்பிணிகள் மாம்பழம் சாப்பிட்டு வந்தால் பிறக்கும் குழந்தை நல்ல ஊட்டத்தோடு பிறக்கும். பெண்களின் மாதவிடாய் பிரச்சினைக்கும் மாம்பழம் சாப்பிடுவது நல்லது. நல்ல கனிந்த மாம்பழங்களை சாப்பிட்டால் மாதவிடாய் ஒழுங்குப்படும். அதேசமயம் பெண்கள் மாதவிலக்கு நாட்களில் காலை நேரத்தில் சாப்பிட்டால் உதிரப்போக்கு அதிகரிக்கும். எனவே அளவோடு சாப்பிடுவது நல்லது.
மாம்பழம் பல் நோய்களையும் போக்கும். பழத்தை துண்டு துண்டாக நறுக்கி வாயில் போட்டு ஈறுகளில் படும்படி வைத்திருந்து 10 அல்லது 15 நிமிடங்கள் கழித்து துப்பிவிட்டால் பல்நோய் பறந்துவிடும். சிறுநீர் பையில் உள்ள கற்களைப் படிப்படியாகக் கரைக்கும் ஆற்றலும் மாம்பழத்திற்கு உண்டு. இரவில் மாம்பழம் சாப்பிட்டு விட்டுத் தூங்கினால் அடுத்த நாள் மலச்சிக்கல் இல்லாமல் இருக்கும்.
அதெல்லாம் சரிதான், சர்க்கரை நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாமா, கூடாதா அதைச் சொல்லுங்க முதல்ல என்கிறீர்களா...? பயப்படாதீங்க தாராளமா சாப்பிடலாம் போதுமா! தினம் ஒரு மாம்பழம் சாப்பிட்டு வந்தால் அதிக கொழுப்புச் சத்து, நீரிழிவு ஆகியவை வருமுன் தடுக்கலாம் என சமீபத்திய ஆஸ்திரேலிய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. இன்னொரு விஷயம் சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள்.... மாம்பழத்தில் உள்ள சில ரசாயனப் பொருட்கள் அதிகக் கொழுப்பு மற்றும் நீரிழிவுக்கு எதிரான மருந்துகளைப் போல செயல்படுவதாக மருத்துவ நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். மாம்பழத்திற்கு புற்றுநோய் கிருமிகளை அழிக்கும் ஆற்றல் இருக்கிறதா என்றும் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
ஹையா ஜாலி! ஆய்வுகளே சொல்லிவிட்டன என்று இன்சுலின் உபயோகித்து வருபவர்கள் மாம்பழத்தை அதிகம் சாப்பிட்டு விடாதீர்கள். உங்கள் மருத்துவரின் ஆலோசனையின் படி அளவாகச் சாப்பிடுங்கள்.
100 கிராம் மாம்பழத்தில் உள்ள சத்துக்கள்
சக்தி - 70 கிலோ கலோரிகள்
கார்போஹைட்ரேட் - 17.00 கிராம்
சர்க்கரை       - 14.08 கிராம்
நார்ச்சத்து          - 1.08 கிராம்
கொழுப்பு          - 0.27 கிராம்
புரதம்             - 0.51 கிராம்
வைட்டமின் ஏ      - 38 மைக்ரோ கிராம்
பீட்டா கரோட்டீன்   - 445 மைக்ரோ கிராம்
தையாமின் 
(வைட்டமின் பி)     - 0.058 மில்லி கிராம்
ரிபோஃபிளேவின் 
(வைட்டமின் பி2)    - 0.057 மில்லி கிராம்
நியாசின் 
(வைட்டமின் பி3)    - 0.584 மில்லி கிராம்
பான்டோதெனிக் 
அமிலம் (பி5)        - 0.160 மில்லி கிராம்
வைட்டமின் பி6      - 0.134 மில்லி கிராம்
போலேட் 
(வைட்டமின் பி9)     - 14 மைக்ரோ கிராம்
வைட்டமின் சி       - 27.7 மில்லி கிராம்
கால்சியம்            - 10 மில்லி கிராம்
இரும்புச் சத்து        - 0.13 மில்லி கிராம்
மக்னீசியம்           - 9 மில்லி கிராம்
பாஸ்பரஸ்            - 11 மில்லி கிராம்
பொட்டாசியம்        - 156 மில்லி கிராம்
துத்தநாகம்           - 0.04 மில்லி கிராம்

செக்கிங் இன்ஸ்பெக்டர்


"இரவும் பகலும் சேகரோட நாய் அவன் கூடவே தான் இருக்கு." "அப்ப... 'நாயில்லாமல் அவன் இல்லே'ன்னு சொல்லு...!"

ஒருத்தி: உன்னோட புருஷன் இன்ஸ்பெக்டரா இருந்துக்கிட்டு எல்லார் கிட்டேயும் கையை நீட்டுகிறாராமே. அடுத்தவள்: அவர் தான் செக்கிங் இன்ஸ்பெக்டராச்சே.

அவன்: என்னது, இன்னிக்கு வீட்டுக்குப் போயி உன் பொண்டாட்டிக் கிட்டே தைரியமா எதிர்த்துப் பேசப்போறியா? எப்ப இருந்துடா இப்படி மாறினே. இவன்: காலையில நான் துடப்பத்தை ஒளிச்சி வெச்சதிலிருந்து.

ஒருவர் டாக்டரிடம்: டாக்டர், நான் பஸ்ஸிலே ஏறினவுடனேயே தூக்கம் தூக்கமா வருது டாக்டர். டாக்டர்: வந்தா என்ன? உட்கார்ந்துக்கிட்டு கண்ணை மூடி தூங்க வேண்டியது தானே. அவர்: நான் தூங்கிட்டா பஸ்லை யாரு ஓட்டறது.

பாகவதர் தன் சிஷ்யனிடம்: பாட்டுப் பாடறதுக்கு முதலில் என்ன வேணும். சங்கீதமா, சாரீரமா? சொல்லு பார்க்கலாம். சிஷ்யன்: வாய் வேணும் சுவாமி.

பண மாலை


"இன்ஸ்பெக்டருக்கு அரசியல் ஆர்வம் வந்திடுச்சுன்னு எப்படிச் சொல்ற கபாலி?" "மாமூலை 'பண மாலையா' போடச் சொல்றாரே!"

"கரும்புத் தோட்டத்திலே வேலை பாக்கிறதை ஏன் விட்டுட்டே?" "சக்கையாப் பிழிஞ்சிடுறாங்க...."

"இப்படி ஆபீஸ் வாசல்ல பிச்சை எடுக்கிறீயே! உனக்கு வெட்கமா இல்லே?" "என்ன பண்றது... உள்ளே அனுமதிக்க மாட்டேங்கிறாங்களே."

"இவருக்கிட்டே எப்பவும் ஆரோக்கியம் இருக்குமிங்கிறீயே! இவரு யாரு?" "லைபாய் சோப் ஏஜெண்ட்!"

"பாகவதர் பாடுற காபிராகம் சப்புன்னு இருக்கே! ஏன்?" "அவரு சுகர் பேஷண்ட்டாம்."

உழைப்பு




உழைப்பைப் பற்றி
படிக்கிறான் மகன்
வியர்வையில் அப்பா..!!!

Thursday, June 30, 2011

எது திருமணம்?


இருட்டில் நடக்கும் நாடகமா?                
இதயங்கள் பேசும் தேன் ரகமா?
தோரணை போடும் யாழ் இசையா?             
தேடல்கள் முடியாத பேராசையா?                  
                      
விருந்துகள் போட்டியிடும் வசந்த கானமா?                  
வீழ்வுகளை கடந்து வரும் போர்க்களமா?
   
சங்கதிகள் பெருக்கும் சங்கீதமா?                  
சந்தோசம் நிலைக்கும் சுபராகமா?
 
மோகம் தொடரும் மேளதாளமா?                     
மோதல்கள் இருக்கும் மத்தளமா?
 
வாதம் முடியாத பட்டிமன்றமா?              
வேதம் சொல்லும் பண்பாட்டா?
மஞ்சள் கயிறை புனிதமாக்கும் வினோதமா? 
மஞ்சத்தில் ஒருவரையொருவர் மன்றாடும் மகாசபையா?
உறவுகள் வரவழைக்கும் உற்சாகமா?
பிரிவுகளை பார்க்க போகும் பந்தயமா?
வரதட்சணை பேசப்படும் வியாபாரமா? 
விவாகரத்தை தூண்டும் அடித்தளமா?
இதில், திருமணம் சொல்வது எத்தனை?
அறிய செய்ய வேண்டும் சிந்தனை!
இதை அறிந்து விட்டால்,        
சொந்தங்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம்      
சொர்க்கம் ஆகும்.