Thursday, June 30, 2011

எது திருமணம்?


இருட்டில் நடக்கும் நாடகமா?                
இதயங்கள் பேசும் தேன் ரகமா?
தோரணை போடும் யாழ் இசையா?             
தேடல்கள் முடியாத பேராசையா?                  
                      
விருந்துகள் போட்டியிடும் வசந்த கானமா?                  
வீழ்வுகளை கடந்து வரும் போர்க்களமா?
   
சங்கதிகள் பெருக்கும் சங்கீதமா?                  
சந்தோசம் நிலைக்கும் சுபராகமா?
 
மோகம் தொடரும் மேளதாளமா?                     
மோதல்கள் இருக்கும் மத்தளமா?
 
வாதம் முடியாத பட்டிமன்றமா?              
வேதம் சொல்லும் பண்பாட்டா?
மஞ்சள் கயிறை புனிதமாக்கும் வினோதமா? 
மஞ்சத்தில் ஒருவரையொருவர் மன்றாடும் மகாசபையா?
உறவுகள் வரவழைக்கும் உற்சாகமா?
பிரிவுகளை பார்க்க போகும் பந்தயமா?
வரதட்சணை பேசப்படும் வியாபாரமா? 
விவாகரத்தை தூண்டும் அடித்தளமா?
இதில், திருமணம் சொல்வது எத்தனை?
அறிய செய்ய வேண்டும் சிந்தனை!
இதை அறிந்து விட்டால்,        
சொந்தங்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம்      
சொர்க்கம் ஆகும்.

வாழ்த்துங்கள்! வாழ்த்தப்படுவீர்கள்!!


வாழ்த்துங்கள்!
வாழ்த்தப்படுவீர்கள்!!
வீழுகிறபொழுது
கைகொட்டிச்
சிரிக்கிறவரிடையே
தூக்கிவிடுவதற்காய்
நீட்டுகிற
கைகள்தான்
தேவனின் கரங்கள்....
வாழ்த்துங்கள்!
வாழ்த்தப்படுவீர்கள்!!
எழுகிறபோதெல்லாம்
தலையில்
குட்டுகிறவர்களைக்
காட்டிலும்
தோளை
தட்டிக்கொடுப்பவர்கள்தான்
கடவுளின் காதலர்கள்...
வாழ்த்துங்கள்!
வாழ்த்தப்படுவீர்கள்!!
கொட்டிக்கிடப்பது
பணமாய் இருப்பினும்
குப்பைதான்
உதவாதவரை.....
தட்டில் இட்டது
கூழாய் இருந்தாலும்
அமிர்தம்தான்
உழைப்பில்வர....
வாழ்த்துங்கள்!
வாழ்த்தப்படுவீர்கள்!!
அம்மாவின்
கண்மையை
கைகளில்
அப்பிக்கொண்டு
சுவர்களில்
அச்சுப்பதிக்கிற
குழந்தைதான்...
நீங்கள்
வாழ்த்துகிறபொழுது
பிக்காசோவாகிறான்
வைகிறபொழுதோ...
பிசாசாய் ஆகிறான்
வாழ்த்துங்கள்!
வாழ்த்தப்படுவீர்கள்!!
மகனின்
வராத மதிப்பெண்களுக்காக
வார்த்தைகளை இறைப்பதைவிட..
தேர்வில்
வாங்கவேண்டிய
மதிப்பெண்களுக்காக
அரவணைப்பது
அர்த்தமுள்ளது...
வாழ்த்துங்கள்!
வாழ்த்தப்படுவீர்கள்!!
எப்போதும்
உங்கள்
அலுவலக மேஜையை
சுத்தம் செய்து
செல்பவனைக்காட்டிலும்
இன்று
உங்கள்
பேனாக்கூண்டில்
ஒற்றை
ரோஜாவைச்
சொருகிப்போன
புதிய தொழிலாளியை
பாராட்டுங்கள்
ரோஜாமலரும் அவனுள்ளும்....
வாழ்த்துங்கள்!
வாழ்த்தப்படுவீர்கள்!!
காலமெல்லாம்
தோழமையோடு..
கரம்கோர்த்துக்கொண்டு
இரண்டாவது
அவதாரமாய்
வலம்வருபவள்
மனைவி..
நகைப்பூச்சாய்
திரிகிற பெண்களிடையே
அவளின்
எளிமையான..
நகப்பூச்சு மாற்றத்தைக்கூட
பாராட்டுங்களேன்
முத்தங்கள் கூடும்....
வாழ்த்துங்கள்!
வாழ்த்தப்படுவீர்கள்!!

சிறியதோ....
பெரியதோ...
சாதனைகளல்ல முக்கியம்
சாதிக்க நினைக்கிற
முயற்சிகள்தான் முக்கியம்
மாறுபடுகிற
எண்ணங்களே
மாற்றங்களை விதைக்கும்..
இனம்கண்டு
வாழ்த்துங்கள்!
வாழ்த்துங்கள்..
வாழ்த்தப்படுவீர்கள்
வாழ்ந்தபிறகும்....!!!!

முயற்சி

வெற்றிகளை மட்டும்
வரலாறுகள் பேசுவதில்லை
தோல்விக்கும் அங்கே இடம் உண்டு
முயற்சி செய்வோம்
இரண்டில் ஒன்று நிச்சயம் கிடைக்கும்.

இன்னொரு அநாதை


பசியை போக்கிக்கொள்ளவே
பழைய சோறு கேட்டு
பலபேர் வீட்டு வாசலில் போய் நின்றேன்.
ஒரு சிலர்
சுடச்சுட சோருபோடுவதாக
வீட்டுக்குள் அழைத்து விருந்தும் வைத்தனர்,
உண்ட மயக்கத்தில்
உறங்கினேன் என்று அன்று நினைத்தேன்
ஆனால்
இன்று தான் தெரிந்தது
என் கர்ப்பை சூறையாட
ஒரு பிடி சோற்றையும்
ஒரு துளி மயக்கமருந்தையும்
தியாகம் செய்த தியாகிகள் என்று.
எது எப்படியோ
என்னைப்போல் இன்னொரு அநாதை
வீதியிலே கையேந்தி ஊர்வலம் போக
என் கருவறைக்குள்ளே ஒத்திகை பார்க்கின்றன.

பொய் முகம்


புகழ், நிழல்
பொய் முகங்கள்
நெருப்புள் இறங்கி
தீய்வதாய் உணர்
எந்த புகழ்
யார் நிழல்
உடன்கட்டையேறும்?

திருடிய கவிதை


இயற்கையே உன்னிடம்
இருந்து தான் திருடுகிறேன்
எனது கவிதைகளை
இப்படியாய்..!
மறையும் சூரியன், அதனை
தொடாமல் தொடும்
கடல்..!
மழை நின்ற பின் 
தொடரும் ஒரு
நிசப்தம்..!
இருண்ட வானத்தில் மூன்றாம்
நாள் பிறை
நிலா..!
குளத்துக் கரையில் உணவுக்காய்
துள்ளி வரும்
மீன்கள்..!
பச்சைப்புல் வெளியின் மூடு
பனி விட்டு சென்ற
வேர்வை..!
தொடர்ந்து வரும் மேக
கூட்டங்களை குளிரச்செய்யும்
மலை..!
குளிர் காலையின் வெது
வெதுப்பான சூரியன்..!
சுடும் சூரியனுக்கு எதிராய்
நீ பொழிய செய்யும்
மழை..!
தென்றலில் இயற்கை
விட்டு செல்லும்
வாசம்..!
நீ ப(டி)டைக்கின்றாய் 
தினந்தோறும் அழகிய
கவிதைகளை எங்களுக்காய்..

பள்ளிக்கூடம்


வயித்துப் பிழைப்புக்காக
கயித்து மேலே நடக்கிறேன்
சுத்தி நின்ன
வேடிக்கை பார்க்கும் கூட்டம்
ஒத்த ரூபா போட
ஒருத்தரும் இல்ல..
நெலத்து மேல நின்னா
நெல நடுக்கம்..
கயித்து மேல நடக்கலனா
வயித்த பிடிக்கும்.
என்ன பார்க்கிறப்போ
தன் பிள்ளைய பார்ப்பதா நெனப்பாங்க
என்ன வளர்க்கவும்
எத்தனையோ பேர் கேப்பாங்க...
அப்பாம்மா நாடோடி..
தம்பி தங்கச்சியோடு
நானும் தெருக்கோடி...
பள்ளிக்கூடம் பக்கம் தான்
எங்க கூத்து
வாத்தியார் நடத்துற பாடம்
கேக்குது காத்துல...
பள்ளிக்கூடம் தொறந்தாதான்
எங்க பொழப்பு...
பாடம் படிக்க முடியாம
தவிக்குது மனசு....
என்பேரு
எழுதிப்பார்க்கும் ஆச மட்டும்
கொறையல...

ஒரு மரம் பல்கலைக்கழகமானது


மூன்று நாட்களாக
சிந்திய கண்­ணீர் நின்றதும்
சிந்தனை தலைதூக்கியது
வாழ்வை வெறுத்த மனிதமே
வாழ்க்கை இதோ உன் கண்முன்னே என்றது.
சுற்றி சுற்றி பார்த்தேன்
எதுவும் தென்படவில்லை
மீண்டும் சோர்ந்துவிட்டேன்,
உறங்கிக்கொண்டிருந்த மனதை
தட்டி எழுப்பியது மனசாட்சி,
நீ அமர்ந்திருக்கும் இடத்திலிருந்து
உலகத்தை பார்
உனக்கெதிராக எதாவது
செயல்படுகிறதா என்று.
என் பாதங்களுக்கு அருகே இருந்த
எறும்புகள் சுறு சுறுப்பாய் உழைத்துக்கொண்டிருக்க,
பட்டாம்பூச்சிகள் எல்லாம்
மின்னலைவிட வேகமாய் பறந்துக்கொண்டிருக்க,
எனக்கு நிழலை தந்த
கொய்யா மரத்திலிருந்த ஒரு பழத்தை
அணில் கொஞ்சம் கடிக்க,
பச்சைக்கிளி கொஞ்சம் கடிக்க
விட்டுச்சென்ற மீதியை தின்ன
இன்னொரு பறவை வந்தது
பதுக்கல் இல்லாத இந்த வாழ்வை கண்டு
பரவசம் கொண்டேன்.
பச்சை பாம்பு
ஒரு கொடியில் படுத்துறங்க
பக்கத்திலே ஒரு ஓணான்
தலைதூக்கி பார்த்துக்கொண்டிருக்க,
நான்கு சிட்டுக்குருவிகள்
அமர்ந்து கதைபேசிக்கொண்டிருந்தன
சிறிது நேரத்தில்
மேலே வட்டமிட்டுக்கொண்டிருந்த
கழுகை பார்த்தவுடன்
எதிரி வந்துவிட்டான் என்று
சண்டைபோட எவையும் தயாராகவில்லை
மாறாக
அதன் அதன் வழியில்
அமைதியாக விலகி சென்றுவிட்டன.
இந்த காட்சிகளை கண்டபொழுது
ஒரு பல்கலைக்கழகத்தை நான் கண்டேன்
கற்றேன் வாழ்க்கை கல்வியை.

அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்பட்டால்...


இரண்டு தூக்கணாங்குருவிகள் ஒரு கூடு கட்டி, அதில் வசித்து வந்தன. ஒருநாள், இரை தேட அவை இரண்டும் வெளியே போயிருந்த சமயத்தில், ஒரு சிட்டுக்குருவி பறந்து வந்து தூக்கணாங்குருவியின் கூட்டுக்குள் நுழைந்துகொண்டது.
சிறிது நேரத்துக்கெல்லாம் ஒரு தூக்கணாங்குருவி பறந்து வந்தது. கூட்டுக்குள் தலையை நுழைத்தது. கூட்டுக்குள் சிட்டுக்குருவி இருப்பதைப் பார்த்துவிட்டு, "குருவி அக்கா. எங்கள் வீட்டில் நுழைந்து எனக்கு இடமில்லாமல் பண்ணிவிட்டாயே. தயவுசெய்து வெளியே போய்விடு" என்று கெஞ்சிக் கேட்டுக்கொண்டது.
"போடி போ. உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள். இனிமேல் இது என் வீடு. நான் இதை விட்டுப் போகமாட்டேன்" என்று குருவி மறுத்து விட்டது.
தூக்கணாங்குருவி அங்கிருந்து வருத்தத்துடனும், யோசனையுடனும் பறந்து போனது.
சிட்டுக்குருவி, கூட்டில் ஹாயாக உட்கார்ந்து "அப்படிப்போடு...........அப்படிப்போடு" என்று ஜாலியாகக் பாடிக் கொண்டிருந்தது.
திடீரென்று தூக்கணாங்குருவிகளின் கூட்டம் பறந்து வந்தது. ஒவ்வொன்றும் ஈரமண்னை அலகில் கொத்தி வந்து, கூட்டின் வாசலைக் கொஞ்சம் கொஞ்சமாக அடைத்து பூசின. கூட்டின் வாசல் குறுகிக் கொண்டே போனது.
முதலில் சிட்டுக்குருவியின் கழுத்து, அப்புறம் தலைமட்டும், கடைசியாக அலகு என்று தெரிந்துகொண்டே வந்து, கடைசியில் ஒன்றுமே தெரியவில்லை. தூக்கணாங்குருவிகள், சிட்டுக்குருவியை கூட்டுக்குள் வைத்து ஒரேயடியாக அடைத்துப் பூசிவிட்டுப் பறந்து போயின.
அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்பட்டால் இதுதான் கதி என்று தாமதமாக உணர்ந்த சிட்டுக்குருவி, அந்தக் கூட்டுக்குள்ளேயே மூச்சடைத்து இறந்து போனது.

கவலைப்படாதே சகோதரா!


காட்டில் பலசாலியான ஒரு சிங்கம் இருந்தது. ஆனால், அது எப்போது பார்த்தாலும் கவலைப்பட்டுக்கொண்டே இருந்தது.
"எனக்கு இவ்வளவு பலம் இருந்தும், இரும்பு போன்ற நகங்களும் பற்களும் இருந்தும் என்ன உபயோகம்? கேவலம், இந்தக் காட்டுச் சேவல் கூவுகிற சத்தம் என்னை நடுங்கவைக்கிறது. இப்படிப் பயந்துகொண்டே வாழ்வது ஒரு வாழ்க்கையா? என்று தன்னைத்தானே நொந்து கொண்டபடி இருந்தது.
அதே சமயம், அங்கே ஒரு யானை வந்தது. அது மிகவும் கவலையுடன் தன் காதுகளை முன்னும் பின்னும் அடித்துக்கொண்டே நகர்ந்தது.
அதைப்பார்த்த சிங்கம், "ஏய்........ஜம்போ! உனக்கு என்ன கவலை? யாருமே உன்னை எதிர்த்து ஃபைட் பண்ணமாட்டார்களே! உன் உடலைப் பார்த்தாலே, எல்லா அனிமல்ஸீம் பயந்து ஓடுமே.....எதற்காக நீ கவலையோடு இருக்கிறாய்?" என்று ஆச்சரியத்துடன் கேட்டது.
அதற்கு யானை, "இதோ......என் காது பக்கத்தில் பறக்கும் குளவியைப் பார்த்தாயா? இது என் காதுக்குள் நுழைந்து கொட்டிவிட்டால், அவ்வளவுதான்..........என் உயிரே போய்விடும்! அதற்காகத்தான் இது காதுக்குள் போய்விடாதபடி, காதுகளை ஆட்டிக்கொண்டு கவலையோடு நடக்கிறேன்.........."என்றது.
அது கேட்டு சிங்கம் யோசித்தது. "இவ்வளவு பெரிய உடம்பை வைத்து இருக்கும் யானை கவலைப்படாது என்று நினைத்தால், அதுகூடக் கவலைப்படுகிறதே! அப்படியானால், பூமியில் இருக்கும் எல்லா உயிர்களுக்கும் ஏதாவது ஒரு கவலை இருக்கத்தான் செய்யும் போலிருக்கிறது!
கவலைப்படுவதால் வாழ்க்கை ஒன்றும் நமக்கேற்ற மாதிரி மாறப்போவதில்லை. அது மட்டுமல்லாமல் கவலைப்பட்டு, கவலைப்பட்டு நம் கண்ணெதிரே இருக்கும் ஜாலியான விஷயங்களைப் பார்த்து சந்தோஷமாகக்கூட வாழமுடியாமல் போய்விட்டதே!" என்று அது புரிந்து கொண்டது.
அன்றிலிருந்து அது கவலைப்படுவதை விட்டுவிட்டு, ஜாலியாக வாழத் தொடங்கியது!

முட்டாளும் புத்திசாலியும்


மழை! ஓயாத மழை! ஏரி நிறைந்து வழியும் அளவுக்கு மழை. அந்த ஏரி நீர் குளிர்ச்சி அடைந்து விட்டது. அந்தக் குளிரைத் தாங்க முடியாத ஒரு தவளை, மழை ஓய்ந்ததும் சற்று தூரத்திலுள்ள ஒரு கிணற்றுக்கு வந்தது. கிணற்று நீர் வெது வெதுப்பாக இருக்குமே என்பதால் கிணற்றிற்குள் குதித்தது.
அந்தக் கிணற்றில் பல காலமாக வாழ்ந்து வந்த ஒரு தவளை இந்தப் புதிய தவளையை வரவேற்றது. 'நான் வெகுநாட்களாகப் பேச்சுத் துணைக்குக்கூட ஆளில்லாமல் தவித்துக் கொண்டிருந்தேன். உன்னைக் கண்டதும் எனக்கு மகிழ்ச்சி' எனக் கூறிப் பொந்தில் வைத்திருந்த உணவு வகைகளைப் புதிய தவளைக்குத் தந்தது.
இரண்டு தவளைகளும் பேசிக் கொண்டிருந்தன. கிணற்றிலிருந்த மற்ற தவளைகளுக்குப் புதிய தவளை வந்தது பிடிக்கவில்லை. 'இங்கே கிடைக்கும் உணவு நமக்கே போதவில்லை. இதில் புதிய விருந்தாளி வேறு' எனக் கவலைப்பட்டன. புதிய விருந்தாளியை எப்படியும் துரத்திவிட முடிவு செய்தன.
இரண்டு தவளைகளும் பேசிக்கொண்டிருப்பதை அருகே சென்று வேடிக்கை பார்த்தன. அப்போது அக்கிணற்றுத் தவளை ஏரித் தவளையிடம், 'நண்பனே! நீ இத்தனை நாளும் எங்கே தங்கியிருந்தாய்?' எனக் கேட்டது.
'நான் ஏரியில் தங்கி இருந்தேன்' என்றது ஏரித் தவளை.
'ஏரியா? அப்படியென்றால் என்ன?' எனக் கேட்டது கிணற்றுத் தவளை.
'இந்தக் கிணற்றைப் போன்ற பெரிய நீர் நிலை. அதில் மீன், ஆமை, முதலை ஆகியவை உண்டு' என்றது ஏரித் தவளை.
'இந்தக் கிணற்றைப் போன்றதில் அவ்வளவு உயிரினங்களா?' என்று கேட்டது கிணற்றுத் தவளை.
'இந்தக் கிணற்றைவிட மிகப்பெரியது ஏரி' என்றது ஏரித் தவளை.
கிணற்றுத் தவளை நம்பவில்லை. 'நண்பா நீ பொய் சொல்லுகிறாய். இந்த கிணற்றைவிட பெரிய நீர் நிலை உலகத்தில் இருக்க முடியாது' என்றது.
ஏரித் தவளை எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், கிணற்றுத் தவளை நம்பவில்லை. கூட இருந்த மற்ற தவளைகளும் நம்பவில்லை.
எல்லாத் தவளைகளும் ஏரித் தவளையைப் பார்த்து 'நீ பொய்யன், புரட்டன், உன்னை நம்பி இங்கே வைத்திருந்தால் ஆபத்து' என்று கூறி ஏரித் தவளையைத் தாக்க முயன்றன.
அப்போது, கிணற்றிலிருந்து நீர் எடுக்க ஒரு பெண் தோண்டியை இறக்கிய போது, அதனுள் தாவிச் சென்று குதித்த ஏரித் தவளை, தோண்டித் தண்ணீ­ருடன் மேலே சென்றது. தாவிக் குதித்து ஏரி நோக்கிச் சென்றது.
முட்டாள்களிடம் வாதாடுவதை விட அவர்களிடமிருந்து ஒதுங்கிச் செல்வதே சிறந்தது.

உங்கள் நலம்


எடுத்துக்கொள்வது உங்களது உடல் நலனுக்கு எந்தெந்த வகையிலெல்லாம் நல்லது என்பது குறித்து மருத்துவ மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் தரும் விளக்கம் இங்கே:
நச்சுக்களை அகற்றுபவை:
நார்சத்து மிகுந்த சுரைக்காய், பூசணி, பசலைக்கீரை மற்றும் முட்டைகோஸ் ஆகியவை சைவ உணவ வகைகளில் மிக முக்கியமானவை. உடலில் சேரும் நச்சுகளை அகற்றும் திறன் மேற்கூறிய காய்கறிகளுக்கு உண்டு. அதே சமயம் முட்டை, மீன் மற்றும் இறைச்சி போன்றவற்றில் புரதச்சத்து இருக்கும் அளவுக்கு நார்ச்சத்து இருப்பதில்லை.
எலும்புகளை வலுவாக்குபவை:
இறைச்சி உடலில் புரதத்தை அதிகமாக்கி, கொழுப்பை கூட்ட வழி வகுக்க கூடியது. மேலும் நமது சிறுநீரகத்திற்கு அதிக வேலைப் பளுவை ஏற்படுத்த செய்வதோடு, எலும்பிலுள்ள கால்சியத்தையும் உறிஞ்சி விடுகிறது. அதே சமயம் சைவ உணவில் இந்த பிரச்சினை இல்லை.
கார்போஹைட்ரேட் பற்றாக்குறை:
அசைவ உணவு அதிகம் எடுத்துக்கொள்பவர்களுக்கு கார்போஹைட்ரேட் பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்பும் அதிகம் உண்டு. இதனால் உடல் தனது இயக்கத்திற்கு தேவையான சக்தியை கார்போஹைட்ரேட்டிலிருந்து பெறுவதற்கு பதிலாக சேமித்து வைக்கப்பட்டுள்ள கொழுப்பிலிருந்து எடுத்துக்கொள்ளும் கீட்டோனியம் என்ற நிலை ஏற்படும்.
எளிதில் ஜீரணம்:
சைவ உணவுகள் மூலமாக கிடைக்கும் ஹார்போஹைட்ரேட் படிப்படியாக ஜீரணமாக உடலுக்கு தேவையான குளுகோஸ் சத்தை சீராக அளிக்கும். அதே சமயம் கொழுப்பும், புரதமும் அதிகம் நிறைந்த இறைச்சி உணவு ஜீரணமாகவே அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். சில சிமயங்களில் சிலருக்கு அது சிரமமாக கூட ஆகிவிடும்.
ஆரோக்கியமான மேனி:
பீட்ரூட், தக்காளி, பூசணி, பாகற்காய் போன்ற சைவ உணவுகள் ரத்தத்தை நன்கு சுத்திகரிப்பதோடு, தோலுக்கு மினு மினுப்பையும் கொடுக்கிறது. அத்துடன் கொய்யா, ஆப்பிள், பேரிக்காய் போன்ற பழங்களை உண்பதும் மேனிக்கு மினுமினுப்பை கூட்டும்.

Mermaid Collection..